Tuesday 3 September 2013

கலித்தொகையில் மூலப் படிவங்கள் : யூங்கியத் திறனாய்வு

யூங் பற்றி ஒரு சிலரே அறிந்திருப்பர். ஃப்ராய்ட் போல் இந்த உளவியல் வல்லுநர் பிரபலமாக வில்லை. இருப்பினும் ஃப்ராய்ட் அளவுக்கு உழைத்தவர். ஃப்ராய்டை உலகம் படித்து விமர்சித்தது. ஆனால் என்னை படிக்காமலேயே விமர்சிக்கிறது என்று ஆதங்கப் பட்டார் யூங். இவர் கண்ட கூட்டு நனவிலிக் ( collactive  unconscious ) வலிமையானது. மனிதனின் நனவிலி இருப்பதை ஃப்ராய்ட் எடுத்துக் காட்டினார். அதுபோல் மனித இனத்தின் பொதுவான நனவிலி ஒன்று இருப்பதை யூங் கண்டெடுத்தார். இந்தக் கூட்டு நனவிலியின் ஆதிக்கத்தில் இருந்து எந்த மனிதனும் தப்ப முடியாது. கனவுகள் புனைவுகள் நடப்பு வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளில் கூட்டு நனவிலி தாமாக வெளிப்படும். இது யூங் கண்ட உளவியல் உண்மை.

இந்த அடிப்படையில் இலக்கியங்களில் கூட்டு நனவிலி வெளிப்பாடுகளை எவ்வாறு காண்பது என்கிற திறனாய்வு அணுகுமுறையை இலக்கிய உலகிற்கு யூங் வழங்கிய கொடை 'மூலப் படிவத் திறனாய்வு' (archetypal  criticism )ஆகும். மூலப் படிவங்கள் கூட்டு நனவிலியின் அடங்கல்கள்(contents ) ஆகும். மனித இனம் தோன்றிய நாள் முதல் இனத்தின் ஒட்டுமொத்த அனுபவங்கள் காலங்காலமாய் தொடர உருவானவையே மூலப்படிவங்கள். தாய், தந்தை இதற்கு சான்று. திருடன், மந்திரவாதி, சான்றோர், கொடூரத் தாய், தெய்வீகக் குழந்தை, கற்புக்கரசி, சுயம்,  கடவுள் எனப் பட்டியல் நீளும். இது போல் நூற்றுக் கணக்கில் மூலப்படிவங்கள் நம்முள் பொதிந்து உள்ளன.

இலக்கியங்களில் இவை தாமாக மாற்றுவடிவில் வெளிப்பட்டு  தமது இருப்பை நிருபித்த வண்ணம் உள்ளன. அதன்படி கலித்தொகையில் சங்கப் புலவன் வழியில் வெளியான மூலப்படிவங்கள்  எவை என்பதைப் பற்றிய ஆய்வு இது. காலம் கடந்து அனைத்து இலக்கியங்களுக்கும் யூங் பொருந்துகிறார் என்பதை நிரூபிக்கும் வண்ணம் இந்த ஆய்வு அமைகிறது..

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரித் தமிழ்த் துறை நடத்துகின்ற செம்மொழித் தேசியக் கருத்தரங்கில் 13.09.2013 நாளன்று வழங்கப்படும் ஆய்வு.

Saturday 23 March 2013

ஆளுமை நோக்கில் தமிழர் பண்பாடு

இன்று சாதாரண மனிதன் கூடப் பயன்படுத்தும் கருதாக்கங்களுள் ஆளுமையும் ஒன்று. குறைந்த பட்சம் 'அவன் குணம் சரியில்லை',  'அவன் போக்கு சரியில்லை' என்று விமர்சிப்பது வழக்கம். இவையும் ஆளுமை குறித்த பார்வைதான். ஆளுமையில் தனியர் ஆளுமை தொடங்கிக் குழும ஆளுமை வரை பரவிக் கிடக்கின்றது. ஓர் ஆளை நாம் எப்படி குண அடையாளப் படுத்த முடியுமோ அப்படி ஓர் குழுமத்தையும் பண்பு ரீதியில் அடையாளப் படுத்த முடியும். தனிமனிதரை அவரின் நடத்தைகளைக் கொண்டு ஆளுமையைக் கணக்கிடலாம். அதேபோல் குழும நடத்தைகளான பண்டிகை,திருவிழா,சடங்கு, கொண்டாட்டம் முதலியவற்றைக் கொண்டு அக்குழுமத்தின் ஆளுமைப் பண்பை அளவிடலாம். அதாவது இவற்றை அவர்கள் எப்படிக் கொண்டாடுகின்றனர் இவற்றின் உள் கருத்து என்ன இவற்றால் அக்குழுவினர் பெறும் மன உணர்வு என்ன முதலியவற்றைக் கொண்டு உளவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்து ஆளுமையைக் கணிக்கலாம். இதைதான் இந்த ஆய்வு முன்வைக்கின்றது. குறிப்பாக, தமிழர்  முக்கியத்துவம் தரும் பொங்கல், தீபாவளி பண்டிகை முன்வைத்துத் தமிழரின் ஆளுமை பகுப்பாய்வு செய்யப் படுகின்றது.

இக்கட்டுரை 'பண்பாட்டு வேர்களைத் தேடி..' நூலில் பதிவாகி உள்ளது.

Thursday 14 March 2013

ஃப்ராய்டிய அழகியல் நோக்கில் உள்ளுறையும் இறைச்சியும்

அழகியல் என்பது தத்துவக் கோட்பாட்டில் தொடங்கி இலக்கியத்  திறனாய்வு வழியில் வளர்ந்து வரும் கருத்தியல் ஆகும். கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாட்டில் கூடக் கவிதையியல் பற்றிப் பேசும்போது அழகியல் பார்வையில்தான் விவரிக்கிறார். நாம் ஏன் இலக்கியத்தை ரசிக்கிறோம்? இலக்கியத்தில் குறிப்பாக கவிதை தரும் இன்பத்திற்கு காரணம் என்ன .. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அழகியல் இன்பம் மாறாதிருப்பதேன் .. இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். எங்கே சங்க இலக்கிய உத்திகளுள் முக்கிய இரண்டு உத்திகளான உள்ளுறை இறைச்சி ஆகியவை  ஃப்ராய்டிய அழகியல் கோட்பாடு கொண்டு அலசப் படுகின்றன.
இவ்விரண்டும் குறிப்புப் பொருள் சார்ந்தவை. அதாவது மறைபொருள் கொண்டவை. மறைபொருள் என்பதும் அதன் இயல்பில் நனவிலிச் சார்பு இருக்கும். இந்தக் கருதுகோள் கொண்டு சில உள்ளுறை இறைச்சிப் பாடல்கள் வழியில் ஃப்ராய்டிய விளக்கம் கொடுத்துளேன். அதாவது மறைபொருள் தரும் இன்பம் நனவிலி இன்பமாகும் என்பது எனது முடிவு. இந்த ஆய்வு எனது தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் அழகியல் இணைநிலைகள் எனும் நூலில் ஓர் இயலாக இடம்பெற்றுள்ளது.

Sunday 10 March 2013

பரிசு-பரிசில் : லக்கானிய அழகியல் விளக்கம்

லக்கான் என்றதும் அவரைப் பற்றித் தெரிந்தோர்க்கு குறியியல் நினைவுக்கு வரும். குறியியல் என்றதும் சசூர் நினைவுக்கு வருவார். ஆனால் சசூரிடம் இருந்து சற்று விலகி நிற்பவர் லக்கான். இவர் உளப்பகுப்பாய்வு கொண்டு சமூகம், இலக்கியம், பண்பாடு, கலை முதலியவற்றை ஆராய்ந்த சிந்தனையாளர். தனி மனித உணர்வுகள் பற்றியும் சிந்தித்துள்ளார். அவற்றுள் ஒன்று அழகு. மனிதனின் துன்பியல் சார்ந்த உணர்வு அழகியல் ஆகும் என்கிற கோட்பாட்டிலிருந்து அதனை வளர்த்து எடுக்கிறார். மனிதனின் சமூக உறவுகளில் பல அழகியலைச் சார்ந்தவை. அவற்றுள் ஒன்று பரிசு. போட்டிப் பரிசு என்றாலும் அன்பளிப்பு என்றாலும் அப்பொருள் அழகியல் உணர்வுடன் இருப்பதைப் பார்க்கலாம். அப்பரிசை நாம் பெறும்போது நம் மனம் பெரும் இன்பம் அழகியல் இன்பமாகும். எந்த இன்பம் எப்படி செயல் படுகின்றது என்பதை இவ்வாய்வு முன் வைக்கிறது.

சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நூல் வரிசை உண்டு. இதன் அடிப்படை பரிசில் ஆகும். அதாவது கலைஞன் மன்னன் அல்லது வள்ளல் முன் கலை நிகழ்த்திப் பாராட்டு பெரும் விதமாகப் பரிசில் பெறுவான்.இப்பரிசில் அவனது வாழ்வாதாரம் ஆகும். இதில் அழகியல் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அவன் நிகழ்த்தும் கலையில் அழகியல் உளது. இந்த அழகியல் இன்பம் பெறுவதால் தான் மன்னன் அக்கலைஞனுக்குப்  பரிசில்  தருகிறான். இங்கே அழகியல் உணர்வுகள் எப்படித் தம்மைப் பரிமாறிக் கொள்கின்றன என்பதை லக்கான் மொழியில் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பாக, லக்கான் கூறும் குறியீட்டு முறைமையில் இதன் செயல்பாடு குறித்து விவரிக்கிறது.

Sunday 10 February 2013

கிரிக்கெட் நம்மை ஈர்ப்பது ஏன் - ஃப்ராய்டிய விளக்கம்

கிரிக்கெட் நம்மை ஈர்ப்பது ஏன் ? பெருவாரியான இந்தியர்கள் கேட்கின்ற கேள்வி இது. கிரிக்கெட் விளையாடாதவர்கள் கூடக் கிரிக்கெட்டால் ஈர்க்கப் படுகின்றனர். எப்படி என்று அவர்களும் அறியார். நானும் சிறு வயது முதல் கிரிக்கெட் விளையாடி வந்தேன். சுமார் 8 முதல் 22 அகவை வரை. ஏதோ ஓர் ஈர்ப்பு இருந்ததை அனுபவத்தில் உணர்ந்தேன். அவ்வமயம் பல நாட்டுப் புற விளையாட்டுகளையும் கால் பந்து கூடைப் பந்து விளையாட்டுகளையும் விளையாடி வந்தேன். கிரிக்கெட் ஈர்த்தது போல் ஏதும் ஈர்க்க வில்லை. உலக அளவில் கால்பந்துக்கு அடுத்து கிரிக்கெட் மோகம் இருப்பதற்கு உளக் காரணம் இருக்க வேண்டும் என்று பின்னாளில் உணர்ந்தேன். அதை ஆய்வு செய்ய முற்பட்டதில் விளைந்தட்னு இந்த ஆய்வு.

ஒவ்வொரு விளையாட்டிலும் உளவியல் பின்னணி இருக்கும். அதேசமயம் நனவிலி பின்னணி இருக்கும். இது தான் உளப்பகுப்பாய்வு சாரம். இதன் அடிப்படையில் கிரிக்கெட்டிலும் நனவிலிக் கூறு இருக்கின்றது. அந்தக் கூறு கிரிக்கெட்டை விளையாடவும் பார்த்து ரசிக்கவும் செய்கிறது. அதனால்தான் நம்மை  அறியா நிலையில்  கிரிக்கெட் நம்மை ஈர்க்கிறது.

இந்த ஆய்வில் நாட்டுப் புற விளையாட்டுகளுள் ஒன்றான கில்லி கோட்டி விளையாட்டை அமைப்பியல் ரீதியில் கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு பார்த்திருக்கிறேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டின் இயல்புகளைக் கொண்டு உளப்பகுப்பாய்வு செய்துள்ளேன். நனவிலி தளத்தில் இருக்கும் சாவு உணர்ச்சிதான் கிரிக்கெட்டை விளையாடவும் பார்த்து ரசிக்கவும் செய்கிறது என்பதை முடிவாக வைத்திருக்கின்றேன்.

இக்கட்டுரையின் சாரம்  ஒரு ஃப்ராய்டியன்  பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள் எனும் எனது நூலில் இடம் பெற்றுள்ளது.

Sunday 3 February 2013

புதுமைப்பித்தனின் கபாடபுரம் : மூலப்படிவத் திறனாய்வு

புதுமைப்பித்தன் - தமிழின் நவீன சிறுகதை சிற்பி ஆவார். ஐரோப்பிய இலக்கியத் தாக்கங்களில் அவர் விளைவித்த சிறுகதைகள் இன்றளவும் விழுமியத்தோடு இருப்பது சிறப்பு. பல அணுகுமுறைகளுக்குப்  பொருந்தக்கூடிய கதைகளாக விளங்குவதால் புதுமைப்பித்தனின் கதைகள் உயிர்ப்புடன் உள்ளன.   இங்கே அவர் எழுதிய கபாடபுரம் எனும் சிறுகதையை யூங்கிய மூலப்படிவத் திறனாய்வு செய்துள்ளேன்.

கபாடபுரம் கதைப்படி படைப்பாளியின் தன்னிலை விளக்கமாக இருக்கிறது. அதாவது கதைத் தலைவன் படைப்பாளி ஆகிறான். கதை முழுவதும் 'நான்' அனுபவங்களாக உள்ளன. எனவே இப்பாத்திரத்தில் படைப்பாளியின் உள சார்பு ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிறது. இந்த துருப்புச் சீட்டைக் கொண்டு யூங்கிய நோக்கில் காணும்போது இக்கதையில் பல மூலப்படிவங்கள் பொதிந்து கிடப்பதைக் காண முடிகிறது. அவற்றுள் முத்தாய்ப்பாக தாய் மூலப் படிவம் வெளிப்பட்டு இருப்பதை யூங்கிய கண் கொண்டு முன்வைக்கிறேன் கூட்டு நனவிலிக்குள் பொதிந்து உள்ள மூலப்படிவங்கள் படைப்புகளில் புனைவேடமிட்டு வெளிப்படும் இயல்பின. இதைப்படி தாய் மூலப்படிவம் படைப்பாளியின் கூட்டு நனவிலியில் இருந்து நனவு படைப்பாக்கத்தில் வெளிப்படும் உத்திகளைக் கொண்டு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை விளக்கி உள்ளேன். இந்த ஆய்வு எனது இரண்டாவது நூலான ஃப்ராய்ட்  யூங் லக்கான் : அறிமுகமும் நெறிமுகமும்  நூலில் ஓர் இயலாக இடம் பெற்றுள்ளது.

ஒரு சந்தர்ப்பத்தில் இதே கதையை ஃப்ராயடிய நோக்கில் ஆய்வு செய்துள்ளேன் என்பது குறிப்பிடத் தக்கது. லக்கானிய அணுகுமுறைக்கும் இக்கதை ஏற்புடையது என்பதை அறியவும். சமயம் வரும்போது அதையும் செய்வேன்.


Monday 7 January 2013

துறவு = வேட்கை : மணிமேகலை வழி லக்கானிய விளக்கம்

லக்கானுக்கும் இலக்கியத்துக்கும் இடையே உள்ள உறவுகளைப் புரிந்து கொள்வது கடினம். அப்படிப் புரிந்துகொண்டால் பிற அணுகுமுறைகள் எளிதாகிவிடும். ஃப்ராய்ட் அளவுக்கு இலக்கிய உளப்பகுப்பாய்வு உலகில் பிரபலம் ஆகா வில்லை என்றாலும் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தினை இலக்கிய ஆய்வுலகில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றார் லக்கான். லக்கானிய உளப்பகுப்பாய்வு வழியில் காணும் முடிவுகள் புதுமையாக இருக்கும். அப்படி நான் கண்ட ஒரு முடிவு 'துறவு = வேட்கை'

மணிமேகலை காப்பியத்தில் துறவு என்பது கதைக் கருவாக உள்ளது. துறவை வலியுறுத்தும் நோக்கத்தில் படைக்கபட்டதுதான் இக்காப்பியம். அதுவும் பெண்கள் கூட துறவுக்குத் தகுதி ஆனவர்களே என்பதை பறைசாற்றும் பௌத்த இலக்கியம் மணிமேகலை. ஆசைகளைத் துறப்பது துறவின் நோக்கம். லக்கானியம் நோக்கில் துறவு  என்பதும் ஒரு விதத்தில் வேட்கையே ஆகும். அதாவது ஆன்மீக வாழ்கையை விரும்பி ஏற்பதால் துறவு நிகழ வாய்ப்பாகிறது. இது ஒருபுறம் இருக்க, மணிமேகலைத் துறவு தன்னுடைய விருப்பமாக  இன்றி, தாயின் விருப்பத்தில் விளைந்ததாக சாத்தனார் காட்டுகிறார்.  இது லக்கான் கூறும் தாய் வேட்கை கருத்தாக்கத்துடன் இணக்கமாகிறது. அந்தத் தாய் வேட்கை மணிமேகலை மனதில் எப்படி இயங்குகிறது என்பதை விளக்கும் முகமாக இவ்வாய்வு அமைந்துள்ளது.


Tuesday 1 January 2013

சிலப்பதிகாரக் கனவுகள் : ஃப்ராய்டிய விளக்கம்

கனவுக்கும் இலக்கிய ஆக்கத்திற்கும் இடையே பல இணைநிலைகள் இருப்பதாக ஃப்ராய்ட் பல இடங்களில் சுட்டுகிறார். இந்த அடிப்படையில் ஒரு நூறாண்டு காலமாக இலக்கிய உளப்பகுப்பாய்வு நிகழ்ந்து வருகிறது. ஒரு மாற்றத்திற்கு இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கனவுகளைப் பகுப்பாய்வு செய்தால் எப்படி இருக்கும்? இந்த ஆவலில் விளைந்ததுதான் இந்த ஆய்வு. தமிழ் இலக்கியத்தில் சங்கம் முதல் இன்று வரை பல கனவுப் பதிவுகள் உள்ளன. குறிப்பாக காப்பியங்களில் பாத்திரங்கள் காணும் கனவுகள் மிகுதி. அதிலும் குறிப்பாக தீர்க்க தரிசனம் காட்டும் கனவுகள் பல உள்ளன. இவை கனவு நம்பிக்கைகள் தொடர்பானவை.

 தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தில் கண்ணகி, கோவலன் காணும் கனவுகள் பதிவாகி உள்ளன. அவற்றை ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு செய்ய முனைந்ததன் விளைவு இவ்வாய்வு. பொதுவில் கனவு என்றால் நம்மிடையே நினைவுக்கு வருபவர் ஃப்ராய்ட்  ஆவார். அவரின் The Interpretation of Dreams (1900) நூல் மனிதக் கனவுகளை விரிவாக அறிவியல் பூர்வமாக ஆராய்கிறது. கனவுகள் யாவும் அல்லது பெரும்பாலும் நிறைவேறாத வேட்கைகளின் மாற்று வெளிப்பாடு என்பார் ஃப்ராய்ட் . இதை மையமாகக் கொண்டு மேற்படிக் கண்ணகி, கோவலன் கனவுகளை ஆராய்ந்துள்ளேன். கனவுக் குறியீடுகளுக்கு போதுமான ஃப்ராய்டியா விளக்கங்களும் வழங்கியுள்ளேன்.

அவர்கள் கனவுகளில் கோவலன் இறப்பதாக வரும். எனில் இது எப்படி வேட்கைத் தீர்வாகும்.? ஃப்ராய்டிய நோக்கில் இதில் நனவிலி வேட்கை பொதிந்துள்ளது என்பதை முன்வைக்கிறது இந்த ஆய்வு.

Saturday 29 December 2012

நாட்டுப்புறவியலும் பெண்ணியமும் : லக்கானியம் முன்வைத்து..

நாட்டுப்புறவியலின் தாக்கம் ஏட்டிலக்கியம் முதல் நவீனத்துவம் வரைப் பரவலாக உள்ளன. எனவே ஓர் இலக்கியத்தை எப்படியெல்லாம் நவீன வாசிப்புக்கு உட்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் நாட்டுப்புறவியலையும் உட்படுத்த முடியும். பெண்ணியம் என்பது நவீனக் கோட்பாடுகளில் வலிமையானது. மனிதப் படைப்புகளில் கலைகளில் ஏன் அறிவியலில் கூட  ஆணாதிக்கம் ஒளிந்துகிடப்பதை கண்டெடுப்பது பெண்ணியமாகும். நாட்டுப்புறவியலின் வழக்காறுகள் நவீனச் சமுகத்திற்கு அடிப்படையாக இருப்பதால் அவற்றில் கூட ஆணாதிக்கம் பொதிந்திருக்கும் என்பது தெளிவே. நாட்டுப்புற ஆண்களை விட நாட்டுப்புறப்  பெண்கள் இரண்டாம்  பட்சமாகப் பார்க்கப் படுவதை அன்றாட வாழ்வில் நாம் காணலாம்.  நாட்டுப்புறவியலின் அனைத்துக் கூறுகளிலும் இதைக் காண முடியும். குறிப்பாக,வேலைக்கான கூலி நாட்டுப்புறப் பெண்களுக்குக் குறைவாகவே கொடுக்கப் படுகின்றது.

பல நாட்டுப்புற இலக்கியங்களில் பெண்களை இழிவாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன. பல பழமொழிகள் இதற்குச் சான்று. அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு எனும் மொழி அனைவரும் அறிந்ததே. பல நாட்டுப்புறக் கலைகளிலும் விளையாட்டுகளிலும் இந்த நிலைகளைக் காணலாம். சமய நம்பிக்கைகள் பற்றிக் கேட்கவே வேண்டாம். பேய்ப் பிடித்தல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கே இணைவிக்கும் போக்கு இருக்கிறது. இப்படி நாட்டுப்புறக்  கூறுகள் ஒவ்வொன்றிலும் பெண்கள் நிலை இரண்டாம் பட்சமாகவும் இழிநிலையிலும் வைக்கப் படுகின்றது. இதற்க்குக் காரணமென்ன என்பதை லக்கான் கண் கொண்டு காண்பதாக இவ்வாய்வு அமைகிறது.

பெண்ணியம் என்றதும் சில எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் நினைவுக்கு வருவர். உளப்பகுப்புப் பெண்ணியம் என்றதும் லக்கான் நினைவுக்கு வருவார். காரணம் பெண் ஏன் கீழ் நிலை ஆனாள் என்பதற்கான உளவியல் பின்னணியில் வரலாற்றை முன்வைத்தப் பெருமை லக்கானைக்  சாரும். அவரின் பெண்ணியக் கோட்பாடு கொண்டு நாட்டுப்புற வழக்காறுகளை ஆய்வு செய்துள்ளேன். நாட்டுப்புற சமுகத்தில் பெண் இரண்டாம் நிலையில் வைக்கப் படுவதால் அதன் தொடர்ச்சியான செவ்வியல் சமூகத்திலும் பெண் இரண்டாம் நிலையில் வைக்கபபடுகின்றனர். இன்று நாம் காணும் பெண்கள் நிலை நாட்டுப்புற வாழ்வியலின் தொடர்ச்சியே அன்றி புதிதாகத் தோன்றியது கிடையாது. இன்னும் நுணுக்கமாக நோக்கின் கற்காலச் சமுகத்தின் தொடர்ச்சியாகவும் காணமுடியும். ஆனால் நாட்டுப்புற சமூகத்தில் தான் வலினைபெற்றது. இது எப்படி நிகழ்ந்தது என்பதை லக்கான் துணைக்கொண்டு இவ்வாய்வில் முன்வைக்கின்றேன். ஒரு கருத்தரங்கத்தில் வழங்கிய இக்கட்டுரை ஒரு கட்டுரைத் தொகுதியில்  பதிவாகி உள்ளது.

Tuesday 4 December 2012

தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : சில இணைநிலைகள்

 ஒப்பிலக்கியம் - இலக்கியத்  திறனாய்வு முறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க அணுகுமுறை ஆகும் இரண்டு இலக்கியத்திற்கு இடையே ஒப்பாய்வு செய்வது இதன் நோக்கம். என்றாலும் இரண்டு கோட்பாடுகளுக்கு இடையே ஒப்பீடு செய்வது கூட ஒப்பியல் ஆய்வு ஆகும். இதன் படி தொல்காப்பியத்தையும் ஃப்ராய்டியத்தையும் இவ்வாய்வு ஒப்பிடுகின்றது. கால, இட. துறை இடைவெளி இருந்தாலும் கருத்தியல் ரீதியில் சில ஒப்புமைகள் இரண்டுக்கும் இடையே இருப்பதை அறிந்ததன் விளைவு இவ்வாய்வு.  தொல்காப்பியத்தையும் ஃப்ராய்டியத்தையும் ஒப்பீடு செய்யும் போக்கு எனது எம்.ஃ பில் ஆய்விலிருந்து தொடங்கியது. உள்ளுறைப் பாடல்களை ஃப்ராய்டிய நோக்கில் ஆய்வதாக அந்த ஆய்வு அமைந்தது. அதன் நீட்சியாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.

ஃப்ராய்ட் என்றால்  கனவுகள் நமது  நினைவுக்கு வரும். மிகவும் புதிர்மை வாய்ந்த கனவுகளை அறிவியல் பூர்வமாகப்  புரிந்துகொள்ள ஃப்ராய்ட் கண்ட இரண்டு அணுகுமுறைகள் பிரிச்சித்திப் பெற்றவை. அவை குறியீடு முறை மற்றும் குழூஉகுறி முறை ஆகும்.1900 காலக்கட்டத்தில் கண்ட இந்த அணுகுமுறை அறிவியல் உலகில் மிகவும் புகழ் பெற்றது. ஐன்ஸ்டின் கண்ட சார்பியல் கோட்பாடு, டார்வின் கண்ட பரிணாமக் கோட்பாடு, மார்க்ஸ் கண்ட மூலதனம் ஆகியவற்றிற்கு இணையாக வைக்கப் படும் கோட்பாடாக ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடு விளங்குகிறது. இது ஒருபுறம் இருக்க, தொல்காப்பியர் தாம் கண்ட இலக்கியக் கொள்கைகளில்  குறிப்புப் பொருள் கோட்பாடு (உள்ளுறை இறைச்சி ) ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடுகளுடன் இணைநிலையாக இருப்பதைக் கண்டு வியந்ததன் வெளிபாடுதான் இந்த ஆய்வு. ஃப்ராய்ட் கூற்றுப்படி,  கனவும் இலக்கியமும் ஒன்றே இந்த ஒப்புமையைத் தொல்காப்பியரிடமும்  காணமுடிகிறது. இந்த ஆய்வுப்படி, கனவுகளை ஃப்ராய்ட் எப்படி  அப்படியே தொல்காப்பியரும் இலக்கியத்தை அணுகினார். இவ்விருவரிடத்திலும்  அணுகுமுறைச் சிந்தனை ஒப்புமைகள் இருந்தன என்பதைப் பறைசாற்றும் முகமாக இவ்வாய்வு அமைந்துள்ளது.

மேலும் நவீனச் சிந்தனைகளான அழகியல்,இன்பக்கொள்கை, பரிணாமக் கொள்கை, மொழியியல் கொள்கை ஆகியவை தொல்காப்பியரிடத்திலும்  இருந்தன என்பதை முன்வைக்கவும் இவ்வாய்வு தவறவில்லை.

இந்த ஆய்வு தனி நூலாகவும் வெளிவந்துள்ளது. பார்க்க: தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : அழகியல்  இணைநிலைகள்

Wednesday 28 November 2012

உவர் சொல்லாடலாகப் பாழி

பாழி - தமிழில் வந்துள்ள பின் நவீன நாவல்களுள் முக்கியமான ஒன்று. இதன் உள்ளடக்கமும் சொல்லாடலும் சாதாரண வாசகனைத் திகைப்படையச் செய்யும். எளிதில் பிடிபடாத நாவல். இதை எழுதிய கோணங்கி தவிர வேறு யாருக்கும் இந்நாவலின் சாரம் புரிந்திருக்க வாய்ப்பில்லை. அவ்வளவு கடினமான மொழிநடை கொண்டது இந்நாவல். இதுபோல் நவீனக் கவிதைகள் போல வந்துள்ளன. வாசகனைத் திகைப்படையச் செய்ய வேண்டும் என்பதற்காக மெனகெட்டு எழுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக உண்டு. இது ஒரு பக்கம் உண்மை என்றாலும் அவ்வாறு எழுதுவது அவ்வளவு எளிதில்லை என்பதை அறியவும். இந்த நாவலைப் படித்தவர்கள் நான் கூறுவதை உணர்ந்திருப்பர். 

ஓர் எழுத்தாளன் வாசகனை எளிதில் அடைய விரும்புவது இயற்கை. மாறாக வாசகனுக்கும் தனக்கும் இடையே கடினமான மொழிநடையைத்  தடுப்புச் சுவராக எழுப்புவதற்குக காரணமென்ன. சத்தியமாக சமூகக் காரணம் இருக்க வாய்ப்பில்லை. எனவே உளவியல் காரணமாகத்தான் குழப்ப மொழிநடையில் சிலர் எழுதுகின்றனர். இந்தக்   கருதுகோளைக் கொண்டு செய்த ஆய்வுதான் இவ்வாய்வு. இந்த ஆய்வு நாவலின் உள்ளடக்கத்தை உளப்பகுப்பாய்வு செய்ய வில்லை. மாறாக மொழிநடையை ஆய்வு  செய்கிறது.  இத்தகு ஆய்வு தமிழில் இதுவே முதல்முறை. புதிது.

நாவலின் கற்பனை அல்லது உள்ளடக்கம் பற்றி உளப்பகுப்பாய்வு எசிய முற்படின் ஃப்ராய்ட் , யூங் , லக்கான் ஆகிய மூவரும் ஏற்புடையவராவர். மாறாக மொழி நடை உளப்பகுப்பாய்வுக்கு லக்கானே பொருத்தமாவார். காரணம், மொழிக்கு லக்கான் முதன்மை தருகிறார். மற்ற இருவரும் எண்ணங்களுக்கு சிறப்புத் தருகின்றனர். இந்த ஆய்வில் லக்கான் முன்வைக்கும் சொல்லாடல் பற்றிய கோட்பாடுகள் ஆய்வுக் கருவியாகப் பயன்படுத்தப் படுகின்றது. அவர் கூறிய இசிப்புச் சொல்லாடல் பாணியில் மேற்படி நாவலின் மொழிநடை இருப்பதை லக்கானியப் பின்புலத்துடன் விளக்கி உள்ளேன். படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையிலான ஊடாடல்கள் பாழி நாவலில் இசிப்பு நோய்த் தன்மியிலானவை என்பதை விவரித்துள்ளேன்.

இந்த ஆய்வு மொ.இளம்பரிதி தொகுத்த அண்மையப் புனைவுகள் நவீன வாசிப்புகள் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. மேலும், மாற்றுவெளி ஆய்விதழ் தமிழ் நாவல் சிறப்பிதழ் 1990-2010(திசம்பர் 2010) சிறுபத்திரிக்கையிலும் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

Saturday 10 November 2012

ரிஷிமுலம் : ஃப்ராய்டியப் பார்வை

 ஜெயகாந்தன் அனைவருக்கும் தெரிந்த உலகத்தரமான தமிழ் நாவலாசிரியர். நவீன நாவல், சிறுகதை தளத்தில் அவரின் பங்கு மதிப்பிட முடியாதவை. சமூகவியல் ஆய்வுக்கு மட்டுமின்றி உளவியல் ஆய்வுக்கும் ஏற்புடையவர் ஜெயகாந்தன் என்பது அவரை முழுமையாக அறிந்தவர்கள் அங்கீகரிப்பர். தமது கதைகள்  சமூகப் பிரச்சனைகளை மட்டும் கொண்டிருக்காது.. சராசரி மனிதனின் உளவியல் பிரிச்சனைகளையும் நுணுக்கமாக விவரிக்கும். இது நாவல்களுக்கு மட்டும் அல்ல சிறுகதைகளுக்கும் பொருந்தும்.. குறுநாவலுக்கும் பொருந்தும்.. அவற்றில் ரிஷிமூலம் ஒன்று..

வரலாறு, மேட்டுக்குடி மக்கள் பற்றிக் கதைகள் படித்துவந்த 60, 70 காலக்கட்டங்களில்  அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சிக்கல்களைக் கருப்பொருளாக்கி அவர் படைத்த இலக்கியங்கள் எளிய வாசகர்களைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லை. யதார்த்தவாதியான ஜெயகாந்தன் தாம் படைத்த இலக்கியங்களில் சமூகச் சிக்கல்களை மட்டும் இன்றி உளவியல் சிக்கல்களை அலசும் கதைகளையும் படைத்துள்ளார். அப்படி அவர் படைத்த உளவியல் நாவல்களில் ஒன்று  ரிஷிமூலம் ஆகும். தமிழில் உளவியல் நாவல் முயற்சி மிகமிகக் குறைவு.  பாலியல் சிக்கலை மையமாக வைத்து ஜெயகாந்தன் படைத்த ரிஷிமூலம் அக்காலத்திலேயே பரபரப்பாகப் பேசப்பட்டது. பலரின் (மரபுவாதிகளின்) எதிர்ப்புக்கும் ஆளானார். அப்படி அவர் விவரித்தது என்ன? தாய் மீதான பாலியல் சிக்கலாகும். ஜெயகாந்தன் கதைகளில் பரபரப்பை ஏற்படுத்திய சிலவற்றில் ரிஷிமூலம் ஒன்று.. 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது.. காரணம் முன்பு கூறிய  கதைக்கரு.. தாய் மீதான பாலியல் எண்ணங்களால் ஒருவன் அலைக் கழிக்கப்படுகின்றான் என்பதை விளக்கும் உளவியல் நாவல் .  இது போதாதா எதிர்ப்புகள் தோன்ற..!  

ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வில்  இதை இடிபஸ் சிக்கல் என்பர். ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வைப்  படித்த மேலை நாவலாசிரியர்கள் சிலர்  அதை அடிப்படையாகக் கொண்டு உளவியல் நாவல்களைப் படைத்தனர். தமிழில் ஜெயகாந்தன் முயற்சித்தார். ஆனால் இதை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. நூலின் முன்னுரையில் இத்தகு விமர்சனத்தை மறுக்கவும் செய்தார். ரிஷிமூலம் வாசித்த எனக்கு அவரின் மறுப்பு வேடிக்கையாக இருந்தது. காரணம் கதையோட்டத்தில் ஆங்காங்கே உளப்பகுப்பாய்வு குறிப்புகள் காணப்படுகின்றன. ஃப்ராய்டை வாசிக்காமல் அவ்வாறு கூற முடியாது. குறைந்தபட்சம் இடிபஸ் சிக்கல் பற்றி அறியாமல் ரிஷிமூலம் படைத்திருக்க முடியாது என்பது எனது கருத்து. எனது இந்த ஆய்வில் ஃப்ராய்டிய எதிரொலிதான் ரிஷிமூலம் என்று அவரின் எழுத்துகளில் இருந்தே சான்றாக்குகிறேன்.. மேலும் கதை நாயகன் ராஜாராமன் என்பவன் ஜெயகாந்தனின் பிம்பம் என்று வாதிடுகிறேன்.. படைப்பாளி தன்னிலை அறியாதபடி  இடிபஸ் சிக்கல் (oedipus complex) தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறது.. அவ்வடிவம்தான் ரிஷிமூலம் . நம் கனவுகளும் இப்படித்தான்  வெளிப்படுகிறது.. ரிஷிமூலம் என்பது ஜெயகாந்தனின் கனவு.. அதில் வரும் ராஜாராமன் தான் சுயம்..

ரிஷிமூலத்தில் வரும் தலைமைப் பாத்திரமான ராஜாராமன் ஜெயகாந்தனின் குரல் (mouth  piece) என்பது என் முடிபு. இதை அவரின் எழுத்துகளில் இருந்தே சான்றுடன் ஆய்வு செய்துள்ளேன். அதாவது ஜெயகாந்தனின் இடிபஸ் சிக்கல் ராமராஜன் எனும் தலைமைப்  பாத்திரத்தைப் படைத்தது என்பது இவ்வாய்வின் முடிபு.

இந்தக் கட்டுரை மொ.இளம்பரிதி தொகுத்த    நாவல் : நவீனப் பார்வை எனும் தொகுதியில் (பக்.. 162-194) வெளிவந்துள்ளது.. காவ்யா வெளியீடு .

Saturday 20 October 2012

உளப்பகுப்பு பெண்ணியவாதம் : அணுகுமுறைக்கான அடிப்படைகள்

நடப்பு உலகில் பெண்ணியத்தைப் புறக்கணித்துக் குடும்பமும் நடத்த முடியாது. அந்தளவுக்கு ஆணாதிக்கம் பற்றிப் பெண்கள் சிந்திது வருகின்றனர். சமூகம் தோன்றிய காலத்திலிருந்து பெண்ணடிமை நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சமூகத்தை ஆணினமே தோற்றிவித்தது என்பதுதான் இதற்குக் காரணம். அதனால் தமது நலனுக்கு ஏற்ப அவன் ஏற்படுத்திக் கொண்டான். ஆண்டான்-அடிமை சமூகத்திலிருந்து பெண்ணடிமை தோன்றிற்று. காரணம் தமக்கு ஓர் அடிமை தேவை என்று ஒவ்வொரு ஆணும் எதிர்பார்த்தான். அதற்கு திருமணம் வழிவகுத்தது. எனவே சமூகத்தின் வேராகிய குடும்பம் ஓர் அடிமை அமைப்பாக இருப்பதால் அதிலிருந்து கிளைத்தெழுந்த சமூக தளங்கள் அனைத்திலும் ஆண்டான்- அடிமை அமைப்பைக் காணமுடிகிறது. இந்த அமைப்பில் பெண்களே அதிகமாக பாதிக்கப் படுகின்றனர்..... வீட்டிலும் வெளியிலும்.

சமூக நோக்கில் இப்படிப்பட்ட வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் ஆணாதிக்கத்தால் உளவியல்  ரீதியில் பெண்கள் படும் வேதனை ஆய்வுக்குரியது. அதைப்பற்றி பெண்ணியவாதிகள் கூட தொடக்கத்தில் சிந்திக்கவில்லை. பெண் ஏன்  அடிமை ஆனால் என்கிற கேள்விக்கு சமூக நோக்கில் கண்டறியப்பட்டது. ஆனால் அவள் எப்படி அடிமை ஆக்கப்பட்டாள் என்பதற்கு உளவியல் ரீதியில்தான் காணவேண்டி உள்ளது. இந்த வினாக்கான விடையைக் காண உளப்பகுப்பாய்வு துணை தேவைப்படுகின்றது. அதை முன்னெடுத்தவர் லக்கான் ஆவார். பெண் மட்டும் அடிமை ஆவதற்கு உடலியல் சார் உளவியல் வளர்ச்சி காரணமாக இருப்பதை லக்கான் தமது உளப்பகுப்பு ஆய்வில் கண்டறிந்தார். மனித வரலாறும் உள அமைப்பும் ஒருமித்த நிலையில் கட்டமைந்தன என்பது அவரின் வாதம். எனவே பெண்களில் உள வரலாற்றை அறியாமல் அவர்களின் கீழ்நிலை குறித்த உண்மையைக் கண்டறிய முடியாது.

லக்கானின் இந்த கருத்தாக்கத்தை ஆதாரமாகக் கொண்டு நாட்டுப்புற இலக்கியத்தை உளப்பகுப்பு பெண்ணியவாதம் நோக்கில் இங்கே  ஆய்வு செய்துள்ளேன்.  லக்கான் முன்வைக்கும் குறை (lack ) ஒரு பெண்ணை ஒட்டுமொத்தக் குறையாக ஆக்கப்பட்டதை மேற்படி நாட்டுப்புற இலக்கியம் வழியில் கண்டறிய முடிகிறது. இந்த அணுகுமுறை ஏட்டிலக்கிய ஆய்வுக்கும் பொருந்தும். காரணம் இதுதான் உளப்பகுப்பு பெண்ணியவாத அணுகுமுறைக்கான அடிப்படைகள் ஆகும்.

Tuesday 9 October 2012

திருப்பத்தூர் பிரம்மேஸ்வரர் கோயில் : வரலாற்றுப் பார்வை

 திருப்பத்தூர் பிரம்மேஸ்வரர் கோயில் பற்றி நான்  ஆய்வு செய்யவேண்டிய அவசியம் என்ன? இரண்டு காரணங்கள்.ஒன்று, சொந்த ஊர் சிறப்பைக் கண்டெடுக்க வேண்டும். இரண்டு, சோழர்கள் வட தமிழகத்திலும்  சிவன் கோயில் எழுப்பினர் என்பதைப் பிறர் அறிய வேண்டும். பொதுவாக வட  தமிழகத்தை விட மத்திய தமிழகத்தில்  சிவன் கோயில்களின் அடர்த்தி குறைவு. திருவண்ணாமலை,காஞ்சிபுரம் கோயில்கள் மட்டும் சிறப்புமிக்கவையாகத் திகழ்கின்றன. தஞ்சை பகுதிகளில் சிவன் கோயில்கள் எண்ணிலடங்காது. காரணம் சோழர்கள் ஆழும்போது தஞ்சை தலைநகரமாக இருந்தது. அதைச்  சுற்றியே அவர்களின் கவனம் இருந்தது. திருப்பத்தூர்  பகுதி சோழ மண்டலத்தின் விளிம்பு நிலை நிலமாகும். இருப்பினும் வட பகுதியில் ஆங்காங்கே சிவன் கோயில் கட்டினர். அவற்றுள் ஒன்று திருப்பத்தூர் பிரம்மேஸ்வரர் கோயில் ஆகும்.

இக்கோயில் வரலாற்று சிறப்பு மிக்கது. இருப்பினும் வரலாறு கவனிக்க வில்லை. தமிழகத்தில் பல சிவன் கோயில்கள் போல் திருப்பத்தூர் பிரம்மேஸ்வரர் கோயிலுக்கு அகவை அதிகம்.   கல்வெட்டுச் சான்றுப்படி திருப்பத்தூரின் பழைய பெயர் திருப்பேரூர் ஆகும்.  பொதுவில் திரு எனும் அடைமொழி கொண்ட ஊர்கள் சிவன் கோயில் சிறப்பு கொண்டவையாக இருக்கும்.( ஸ்ரீ - வைணவ அடைமொழி யாகும்). இந்த ஊரிலும் கோட்டைக் கோயில் எனும் சிறப்புடைய சிவன் கோயில் உள்ளது. கோட்டை என்பதில் அரண்மனை அரசாங்கம் சார்ந்த சொல் வழக்கு. இதன்படி இவ்வூரில் அரசவை இருந்தது. அந்தப் பகுதியில் சிவன் கோயில் அமைந்திருக்கிறது என்பதை ஊகிக்கலாம். இக்கோயில் சுமார் கி பி 4ஆம் நூற்றாண்டில் கோச்சேங்கனாரால் அமைக்கப் பட்டது. பிறகு பல மன்னர்களால் பராமரிக்கப் பாட்டது. குறிப்பாக உத்தமச் சோழன், இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் ஆகியோரால் கட்டி முடிக்கப் பட்டது.இக்கோயிலின் ஒரு சிறப்பு - கைப்பிடி அளவுடைய சிவலிங்கமாகும். மேலும் ஆதி சங்கரர் கைப்பட வரைந்த மூன்று  ஸ்ரீ சக்கரச் செப்புத் தகடுகளில் ஒன்று இக்கோயிலில் உள்ளது. ( மற்றவை காசியிலும் காஞ்சியிலும் உள்ளன).  பல போர்க்காலங்களில் அடைக்கலமாகவும் இருந்த கோயிலாகும். இப்படி வரலாற்று சிறப்புகளை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.




Thursday 13 September 2012

நாடுப்புறவியலும் உளப்பகுப்பாய்வு நெறிகளும்

மனித சமூகம் பல கட்டங்களைக் கொண்டது. தற்போது நாம் காணும் நவீன சமூகத்திற்கு  முன்னோடியாக செவ்வியல் சமூகம் நாட்டுப்புறச் சமூகம் தொன்மைச் சமூகம் ஆகியவை உள்ளன.   தொன்ம சமூகத்தை மானிடவியலும் செவ்வியல் சமூகத்தை சமூகவியலும் ஆராய்ந்தன. ஆனால் நாட்டுப்புற வழக்காறுகளைப்  பலகாலம் ஆராய முற்படவில்லை.  எனவே நாட்டுப்புறவியல் எனும் தனித்த துறை தோன்றக் காரணமானது. இது ஒருபுறம் இருக்க நாட்டுப்புற உளவியலை ஆராய வேண்டிய அவசியம் சென்ற நூற்றாண்டில் தோன்றிற்று. அதைத் தோற்றி வித்தவர் சிக்மண்ட் ஃப்ராய்ட்.தொடர்ந்து வளர்த்தெடுத்தவர் காரல் யூங்.

 ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வும்  யூங்கிய  உளப்பகுப்பாய்வும் நாட்டுப்புற உளவியலாய்வுக்கான  அடிப்படைகள் ஆகும். இன்றளவும் இவ்விருவரின் கோட்பாடுகளைக் கொண்டுதான் நாட்டுப்புற உளப்பகுப்பாய்வுகள்  நடந்து வருகின்றன.  நாட்டுப்புற வழக்காறுகளை உளப்பகுப்பாய்வு செய்யவேண்டும் எனில் ஃப்ராய்டிய, யூங்கிய அடிப்படைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவற்றுக்கும் மேலாக நாட்டுப்புற உள்ளத்தின் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும்.  எனது இந்த ஆய்வு அதைதான் செய்கிறது.

நாட்டுப்புற உள்ளமானது ஃப்ராய்ட் கூறும் தனியர் நனவிலிக்கும் (personal unconscious) யூங் கூறும் கூட்டு நனவிலிக்கும் (collective unconscious ) இடையில் அமைந்துள்ளது என்பது எனது ஆய்வின் முடிபு. இதை விவரிக்கும் முகமாக இந்த ஆய்வில் நாட்டுப்புற பண்புகள் மற்றும் உளப்பகுப்பாய்வு கொள்கைகள் ஆகியவற்றை பக்கத் துணையாகக் கொண்டுள்ளேன். இதைப் புரிந்துகொண்ட பிறகு நாட்டுப்புற உளப்பகுப்பாய்வு செய்ய அல்லது வாசிக்க எளிதாகும் என்பது என் நம்பிக்கை.

இந்த ஆய்வு நாட்டார் வழக்காற்றியல்   ஜூலை 2006  ஆய்விதழில் பதிவாகி உள்ளது.

Thursday 6 September 2012

வரலாற்று வரைவியலும் பின்நவினத்துவமும்

 பின்நவினத்துவமும் வரலாறும் பின்னிப் பிணைந்தவை. மனிதச் சிந்தனை வரலாற்றை ஆராய்ந்ததால் விளைந்த விளைவு பின்நவீனத்துவம் ஆகும். இருப்பினும் பின்நவீனத்துவத்தை இலக்கியம் பயன்படுத்திய அளவுக்கு வரலாறு பயன் படுத்தவில்லை. தமிழ் சூழலில்  முற்றிலும் இல்லை. பின்நவீனத்துவம் என்பது ஓர்  அணுகுமுறை. அது வரலாற்றுக்கும் என்று குறிப்பிட்ட அணுகுமுறையைத் தந்துள்ளது. இங்கே வரலாற்றை வரலாறாகப் பார்க்காமல் வரலாற்று வரைவியாலாகப் பார்க்கப்படுகின்றது. அடுத்து, இந்த வரலாற்றுவரைவியலை இலக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இதன்படி, வரலாறு ஓர் இலக்கியம் ஆகிறது.மனித ஆக்கங்கள் எல்லாவற்றையும் பனுவலாகப் (text ) பார்க்கின்ற அணுகுமுறைதான் வரலாற்றின் மீதும் நிகழ்கின்றது.

வரலாறு ஓர் இலக்கியம் என்பதால் படைப்போனின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப வரலாறு வரையப்படுகின்றது. அதனால் பல உண்மைகள் மறை(று )க்கப்படுகின்றன. எந்த ஒரு வரலாற்றுச் சின்னமும் நிலைத்த வரலாற்று விழுமியம் கொண்டதில்லை.  காலத்திற்கு ஏற்ப மாறுகின்றது. ஒரு சொல்லுக்கான பொருண்மை மாற்றம் நிழல்வதுபோல் இது நடல்லின்றது. தமிழில் நாற்றம் எனும் சொல் ஒருகாலத்தில் வாசனையைக் குறிக்க, தற்போது துர்நாற்றத்தைக் குறித்து நிற்கிறது. இந்த அடிப்படையில் வரலாற்றுச் சின்னங்கள் ஒவ்வொன்றும் குறிப்பானாக அமைந்துள்ளது. ஒருகாலத்தில் சமண மடங்களாக இருந்தவை பிற்காலத்தில் சைவ, வைணவ மடங்கலாயின. இந்த மாற்றம் மொழியின் குறிப்பான்(signifier ) மாற்றம் போன்றது என்று இவ்வாய்வில் நிறுவுகிறேன். இந்தப் பார்வை கொண்டு மதக்கலவரங்களாலும்,அரசியல் மாற்றங்களாலும் நிலைமாற்றம் பெற்ற வரலாற்றுச் சின்னங்களுக்கும் பொருந்தும். காரணம் ஒரு குறிப்பானுக்கான குறிப்பீட்டை (signified ) அதிகாரமே தீர்மானிக்கின்றது. இதுதான் பின்நவீனம் முன்வைக்கும் குறியியல் வாதம். இந்த வாதத்ததின் படி வரலாற்று வரைவியல் என்பது இலக்கியமாகிறது. அதனால்தான் வரலாற்றுப் படிப்பை கலையாகப் பார்க்கப் படுகின்றது. பி ஏ வரலாறு என்போமே அன்றி பி ஏ அறிவியல் என்று கூறுவதில்லை.

Sunday 26 August 2012

ஈகோவும் அதன் இருமையும் : நாட்டுப்புறக் கதைகள் வழி ஃப்ராய்டிய விளக்கம்

உளவியல் என்பது உலத்தின் இயல்புகள் பற்றியது என்றாலும் அது உண்மையில் ஈகோ பற்றியது ஆகும். ஈகோ தான் உள்ளம். ஈகோவின் பகுதிகளே உள்ளத்தின் பகுதிகள் என்றாகின்றன. ஃப்ராய்ட் உளவியலில் கூட இட்,ஈகோ,சூபர் ஈகோ ஆகிய பிரிவுகள் உள்ளன. அவை ஈகோவின் பகுதிகள் ஆகும். பண்புகள் அடிப்படையில் அவ்வாறு பகுக்கிறார் ஃப்ராய்ட். இவற்றில் இட் என்பது பழமையான ஈகோ. எனவே நனவிலி என்றாகிறது. சூபர் ஈகோ என்பது நடப்பு புறவாழ்வின் சமூக விதிகள் அடங்கிய பகுதியாகும். எனவே இட்டுக்கும் சூபர் ஈகோவுக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்படும். இம்முரண்பாடு நனவு-நனவிலி முரண்பாடு போல் அமைந்து உளப்போராடங்கள் ஏற்படுகின்றன. இவ்விரண்டையும் சமன்படுத்தும் பணி ஈகோவுக்கு உள்ளது. அப்படிச் சமாதானம் செய்யும்போது சூபர் ஈகோவுக்கு ஆதரவாகவோ அல்லது இட்டுக்கு ஆதரவாகவோ ஈகோ நடந்துக் கொள்ளும். இச்சமயம் இருதலைக் கொள்ளி எறும்பாக ஈகோ தவிக்கும். ஈகோ செயலில் இத்தகு இருமைப் போக்கு நம்மிடையே அவ்வப்போது ஏற்படும்.

ஈகோவின் இருமை செயல்பாட்டால் நாம் இருவித போக்குக்கு ஆளாகிறோம். இந்தப் போக்கு இலக்கியங்களில் கதைகளில் வெளிப்படுவதுண்டு. குறிப்பாக கதா நாயகன் சூபர் ஈகோ சார்புடையவனாகவும் வில்லன் இட் சார்புடையவனாகவும் இருக்கிறான். இதன்படி நாம் ஒரு தருணத்தில் நாயகன் அல்லது நாயகி ஆகவும் இன்னொரு தருணத்தில் வில்லன் அல்லது வில்லி ஆகவும் இருக்கிறோம். கதைப் படைப்புகளில் வரும் நாயகன்-வில்லன் எனும் இருநிலை எதிர்மை (binary opposition ) அப்படைபாளியின் ஈகோவின் இருமைப் போக்கின் வெளிப்பாடுகள் ஆகும். இந்தக் கருத்தாக்கத்தை விளக்க நாட்டுப்புறக் கதைகளை ஆய்வுக்களமாக அமைத்துக் கொள்கிறது இந்த ஆய்வு. இந்த அணுகுமுறைப்படி இராமாயணம். மகாபாரதம் தொடங்கி, சிலப்பதிகாரம்,மணிமேகலை கடந்து இன்றைய நவீனப் படைப்புகள் வரை அணுக வழி உள்ளது. அதற்கான முன்னோட்டமாக இவ்வாய்வு அமைகிறது.

Friday 3 August 2012

கில்லி கோட்டி - கிரிக்கெட் : ஃப்ராய்டிய ஒப்பாய்வு

அகில உலகில் கால் பந்துக்கு அடுத்த ஈர்ப்பாக இருக்கும் விளையாட்டு கிரிக்கெட் என்பது பலர் அறிந்த செய்திதான். இந்த விளையாட்டின் மூலக் காரணம் இங்கிலாந்து என்பதும் பொதுவான செய்திதான். ஓர்  உண்மை என்னவென்றால் கிரிக்கெட் வரலாற்றுப் படி இந்தியா தான் அதன் பூர்விகம் ஆகும். இந்தியாவில் நாட்டுப்புற விளையாட்டாக விளையாடி வந்த கில்லி கோட்டி (கில்லி தண்டா) விளையாட்டே நவீன கிரிக்கெட்டாக உருமலர்ச்சி பெற்றது. இவ்விரண்டு விளையாட்டின் செயல்முறை அமைப்புகள் இணைநிலையாக இருக்கின்றன என்பதை ஒப்பாய்வு வழியில் அறிய முடிகிறது. இரண்டையும் சிறு வயதிலிருந்தே தீவிரமாக விளையாடி வந்த நான் எனது அனுபவத்தின் வழியில் ஒப்புமைகளைக் கண்டு  ஃப்ராய்டியத்தைப் பொருத்திப் பார்த்ததன் விளைவு இக்கட்டுரை.

கிரிக்கெட் விளையாடும்போது ஏற்படும் உணர்வெழுச்சிகள் நனவிலி சார்புடையவை என்பதை நிருபிக்கும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது. குறிப்பாக நனவிலி சாவுனர்ச்சியின் ஆற்றல் மிகு வெளிப்பாடாக கிரிக்கெட் விளங்குகிறது.

Sunday 29 July 2012

புதுமைப்பித்தனின் கனவோடை

புதுமைப்பித்தனின் கனவோடை: கபாடபுரம் வழி ஃப்ராய்டிய  விளக்கம்   என்பதுதான் ஆய்வுத்தலைப்பு. அது என்ன கனவோடை ? ஆங்கிலத்தில் surreaism என்கிற இலக்கிய உத்தி உண்டு. அதாவது படைப்பாளி மனத்திலிருந்து தன்னியலாக (automatic) வெளிப்படுகின்ற புனைவுக்கு இவ்வாறு சுட்டுகின்றனர். படைப்பு உத்தியில் இதுவும் ஒன்று. இது நனவோடை என்று சொல்லப்படுகின்ற stream of  consciousness நிலைக்கு எதிர்பதம். நனவோடையில் நனவுநிலையில் இருந்து தன்னியல் புனைவு தோன்றும். சர்ரியலிசம் உத்தியில் நனவிலியில் இருந்து தோன்றும். இது கனவு போன்றது என்பதால் கனவோடை என்று சுட்டுகிறேன்.

கனவோடை உத்தியில் சில தமிழ் படைப்பாளிகள் பங்களிப்புச் செய்துள்ளனர். புதுமைப்பித்தன் முன்னிலையில் வகிக்கிறார். அவரின் சில சிறுகதைகள் கனவோடை உத்தியிலானது. அவற்றுள் ஒன்று கபாடபுரம். இக்கதை முழுமைக்கும் கனவுக் காட்சி போல் விளங்குவதால் ஃப்ராய்டின் கனவுப் பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறேன். சர்ரியலிசம் எனும் உத்தி ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடு அடிப்படையில் இருந்து வந்தது என்பதை அறியவும். கதையில் கதைத்தலைவன் காணும் கனவு தான் முழுவதும் உள்ளது. எனவே ஃப்ராய்டின் கனவுப் பகுப்பாய்வுக்கு மிகப் பொருத்தமான நிலையில் கதை உள்ளது. இக்கனவில் படைப்பாளியில் நனவிலிக் கூறுகள் பொதிந்துள்ளவற்றை அடையாளம் கண்டு விளக்குகிறது இவ்வாய்வு.

Sunday 22 July 2012

இன அடையாளம் : லக்கானிய விளக்கம்

இன அடையாளம்- மனிதனுக்கு மட்டும் உரித்தான ஒன்று. அடையாளம் இன்றி எந்த உயிரினமும் இயங்க முடியாது. தாம் எப்படிப் பட்ட உயிர் என்று தெரிந்து கொண்டால்தான் இனப்  பெருக்கம் ஏற்பட வாய்ப்பாகும். ஒரு விதத்தில் இன அடையாளம் அனைத்து உயிரினங்களுக்கும் பொது என நினைக்கக் கூடும். ஆனால் இந்த இன அடையாளம் என்பது உயிரினத்தைக் குறிக்காது. சமூக வட்டத்தைக் குறிக்கும். இந்தச் சமூக வட்டம் உடல் சார்ந்ததாக இருக்கலாம். சான்று: நீக்ரோ, மங்கோலியர். தேசியம் சார்ந்ததாக இருக்கலாம். சான்று: அமெரிக்கா,  இந்தியா. சமயம் சார்ந்ததாகவும் இருக்கலாம். சான்று: இந்து, இஸ்லாம். ஏன்... சாதி சார்ந்ததாகவும் இருக்கலாம். சான்று: பிராமணர், தலித். ஏதாவது ஒரு குழுமத்தில் ஒவ்வொரு மனிதனும் இயைந்துள்ளான். ஒன்றுக்கு மேற்பட்டக் குழுவில் இருக்கவும் ஒருவரால் முடியும். இது சமுக மனித இயல்பு.